Tuesday, December 7, 2010

கர்மவீரரும் கருமம் பிடித்த வீரரும்

இப்பொழுது ஒரு வழியாக முட்டி முட்டி பார்த்துவிட்டு தங்களால் செய்வதற்கு ஏதுமில்லை என்ற தீர்மானத்துடன் மக்கள் ராஜா-ங்க ஊழலை மறக்க ஆரம்பித்திருப்பார்கள் என நினைக்கிறேன். வெளியே தெரியும் வெளிச்சத்திற்கு போக எண்ணி கண்ணாடி சன்னலை முட்டிமுட்டித் தோற்கும் விட்டில் பூச்சியைப்போல. மனதில் தைத்த இந்த ஊசி, ஏதோ ஒரு மூலையில் உறுத்தலாக வலித்துக்கொண்டே இருக்கும்.


கடந்த வாரம் ஆனந்தவிகடன் மதன் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி பதில்..

கேள்வி : பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரேயொரு ஆலோசனை கூற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், என்ன கூறுவீர்கள்?
பதில் : ஆலோசனையா? ஒரு குடிமகன் என்கிற முறையில் நான் கேள்வி மட்டும்தான் கேட்க முடியும். 'தன்னைச் சுற்றிலும் தவறுகள் நிகழ்ந்தபோது எல்லாம் அதை ஆட்சேபித்து காந்திஜி உண்ணாவிரதமே இருந்தது உண்டு. நீங்கள் காந்திஜியைவிட நிரம்பப் படித்தவர். தேனிக்கூட்டை தேனீக்கள் அப்பிக்கொண்டு இருப்பதைப்போல (தேனீக்கள் மன்னிக்க!) உங்கள் ஆட்சியில் ஊழல்கள் அப்பிக்கொண்டு இருக்கின்றன. ஒரு வார்த்தைகூட தட்டிக் கேட்காமல் நீங்கள் கம்மென்று இருப்பது என்ன நியாயம்? 100 கோடிக்கு மேற்பட்ட இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக, பிரதமராகப் பதவி வகிக்கும் நீங்கள், தார்மீகரீதியில்கூட கருத்துகளை வெளியிட முடியாத பரிதாப நிலையில் இருப்பதற்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் வரலாறு உங்களை எப்படி அழைக்கப்போகிறது என்கிற கவலையே உங்களுக்கு இல்லையா?' என்று கேட்பேன்

பொதுவாக சுவையாக பதில் அளிக்க வாய்ப்பளிக்கும் கேள்விகளையே இந்த மாதிரி பகுதிக்கு பத்திரிக்கைகளில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த கேள்வியை பொருத்தமட்டில் அப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல், தங்கள் உள்ளக்கிடக்கையை வெளியிட இதை ஒரு வாய்ப்பாக கேள்வி கேட்ட வாசகரோ, பதிலளித்த மதனோ பயன்படுத்திக்கொண்டனரோ என எண்ணத் தோன்றியது.. இதுதான் ஏனைய இந்திய மக்களின் நிலையும். எதுவும் செய்ய இயலாத நிலையில், தலைவலியை பொறுக்கமாட்டாமல் தலையணையை மாற்றிய கதையாக, இந்த கட்சி, இல்லாவிட்டால் இன்னொரு கட்சி என்று தேர்ந்தெடுத்துப் பார்த்துவிட்டு எதுவும் சரிவராமல் மக்கள் மறுகுகிறார்கள். தலைவனில்லாமல் தத்தளிக்கிறது இந்தியா.

எனக்கும் இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது திரு.மன்மோகன்சிங்கிடம்...
  • நூறுகோடி மக்களிலும் யாருக்கும் கொடுக்காமல் ஒரு உன்னத பதவியை உங்களுக்கு கொடுத்துவிட்டு உங்கள் முகம் பார்த்து நம்பிக்கையோடு நடக்கிறோமே... உங்கள் கையில் நாடு இருக்கிறது என்ற நம்பிக்கையில் உறங்கப்போகிறோமே, இத்தனை கோடி மக்களையும் ஏமாற்ற எப்படி ஐயா மனம் வந்தது?
  • உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்களிடம் கைகுலுக்கும் போது, உங்கள் கைகளில் படிந்திருக்கும் அழுக்குகள் உங்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தவில்லையா?
  • தினம் தினம் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக போராடினாலும், தன் தாய்நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் பாமரர்கள் நிறைந்த இந்த தேசத்தில், பெரும் பொருளாசைக்காகவும், பொருந்தா வருமானத்திற்காகவும் சட்டத்தையும் தர்மத்தையும் புறந்தள்ளிவிட்டு செல்லும் அதிகார மையத்தின் தலைவனாயிருப்பதில் பெருமை கொள்ளுகிறீர்களா?
  • அரசியல் சாசனப்படி உங்களின் சக அமைச்சர்களை தன்னிச்சையாக தேர்ந்தெடுத்தவரும் நீங்கள்தான்.. அவர்களை வழிநடத்திச் செல்லவேண்டியவரும் நீங்கள்தான்... அப்படியிருக்கையில் வெறுமனே தீவிர மௌனமாயிருப்பதால் மட்டும், இந்த தேசத்திற்கான உங்கள் பொறுப்பு தீர்ந்து போனதாய் நினைக்கிறீர்களா?
  • நீங்கள் பதில்சொல்ல வேண்டியது சோனியாவிற்கும், கருணாநிதிக்கும் அல்ல.. பலநூறுகோடி முகங்களைக் கொண்ட பாரத தாய்க்கு என்பதை மறந்து போனீர்களா..


எனக்கும் இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது திரு.ராஜாவிடம்....
  • ஒரு ஒடுக்கப்பட்ட இனம், நீண்ட நெடும் போராட்டதிற்குப் பிறகு வென்றெடுத்த நியாயமும், உரிமையும் சரிதான் என்று சமூகத்தின் ஏனைய மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், அந்த இனத்தின் பிரதிநிதியாக அதிகாரத்தை அடைந்த நீங்கள் மிக அதிக பொறுப்போடு நடந்து கொண்டிருந்தால், ராசா என்ற தனிமனிதன் மட்டுமல்ல ஒரு இனமே அரியணை ஏறியிருக்கும். (உதாரணத்திற்கு அம்பேத்கரை எடுத்துக்கொள்ளலாம்) அதைவிடுத்து பேராசையினால் நீங்கள் சார்ந்த இனத்தின் போராட்டத்தை பின்னெடுத்துச் சென்றிருக்கிறீர்களே.. இதை இந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா அல்லது ஏமாற்றலாம் என்று நினைத்தீர்களா?

பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு ஒருவர் சென்றிருக்கிறார்.. பொருட்கள் இறைந்து கிடக்கின்றன.. ஒரு சிறு பொருளை எடுத்துக்கொண்டால் என்ன.. தெரியவா போகிறது என நினைக்கிறார்... சுற்றிலும் கண்காணிக்கும் காமிராவும், சுற்றித்திரியும் வேலையாட்களும் அவருக்கு பயத்தை ஏற்படுத்த அந்த அற்ப ஆசையை விட்டுத்தள்ளுகிறார்... பொருளை எடுத்து மாட்டிக்கொண்ட ஒருவருக்கும், எடுக்க நினைத்து பயத்தில் எடுக்காமல்விட்ட இவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. மன்மோகன் இந்த ரகத்தைச் சேர்ந்தவரா என்பதை அவரின் மனசாட்சிக்கே விட்டுவிடலாம். படித்தவன் சூதும்வாதும் செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதி பாடினான். ஐயோ என்று போவானோ, மாட்டானோ போகவேண்டும் என்பது கவியரசரின் ஆசை.



ஒரு மழை நாளில், பாதிக்கப்பட்ட மக்களை காண வந்தார் அன்றைய முதல்வர் காமராசர். கொட்டும் மழையோடும், வாட்டும் பசியோடும் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த மக்கள் மழைக்கு அஞ்சி பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுத்தாகிவிட்டதா என்று அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரை வினவுகிறார் காமராசர். அரசாங்க உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், வந்தவுடன் உடனே உணவு தந்து விடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூற கோபமுற்ற காமராசர் சொல்லுகிறார்.. "இதற்குதானா இவ்வளவு படித்து வந்திருக்கிறீர்கள்? உடனே சென்று அருகில் உள்ள கடைகளில் காமராசர் கேட்டார் என்று கடனுக்கு சாமான்களை வாங்குங்கள்.. உணவு தயாரித்து மக்களின் பசியைப் போக்குங்கள்.. அரசாங்கத்திடமிருந்து பணம் வந்தவுடன் நேர்மையாக கடைக்காரர்களிடம் பணத்தை கட்டி கணக்கை முடியுங்கள்..." படிப்பறிவில்லாத ஓரு தலைவனால், அரசாங்கமும், அதன் சட்ட திட்டங்களும், அதிகாரிகளும் அவர்களின் நடைமுறைகளும் மக்களுக்காகதான், அதுதான் மக்களாட்சி என்று புரிந்து கொள்ள முடிந்த போது மெத்தப்படித்த மன்மோகன்சிங் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஏனோ? அல்லது நாம் ஏமாளித்தனமாக இப்படிப்பட்டவர்களை புரிந்துகொள்ள மறுக்கிறோமா? காந்தி, காமராசர் போன்றவர்கள் மக்களுக்காக வந்தார்கள்.. மக்களாலே வென்றார்கள்... வெற்றியை மக்களுக்கே தந்தார்கள்... இந்த தலைவர்களின் தியாகத்தை கேடயமாகக் கொண்டு, திருட்டை நடத்துகிறார்கள் இன்றைய காங்கிரஸ்காரர்கள்.

வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியபோது, கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று முந்திக்கொண்டு பேசிய இந்த சீக்கியச்சிங்கம் இப்பொழுது ஊழல் சேற்றில் ஒளிந்து கொண்டது ஏனோ?

5 comments:

Unknown said...

Mr.Singh has to prove himself his loyalty...

Anonymous said...

இன்றைய சூழலில் தன்னலமற்ற, ஊழலற்ற தலைவன் ( கட்சி ) , என்பது
காணல் நீராயிற்று.இந்தியாவின் எதிர்காலம் மக்களுக்கு ஏமாற்று காலமே!

Paji said...

//இன்றைய சூழலில் தன்னலமற்ற, ஊழலற்ற தலைவன் ( கட்சி ) , என்பது
காணல் நீராயிற்று.இந்தியாவின் எதிர்காலம் மக்களுக்கு ஏமாற்று காலமே!//

சரியாக கூறினீர்கள் நண்பரே.. சரியான தலைவர்கள் இல்லாததே அரசியல் மற்றும் சமூக சூழல் கேட்டுபோனதற்கு முக்கிய காரணம். தங்களின் வருகைக்கு நன்றி.. தொடர்ந்து படியுங்கள்..

Bank Jobs in India said...

I just have to say "WOW". Nicely written. But the reason for our state of affairs is nobody but us. We denied ourselves the right leadership.

Samy said...

Britain gone.Now Italy's time.We have to do something.Otherwise China will come, but we tolerate.samy

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in