Wednesday, December 8, 2010

வரூம் ஆனா வராது...


கடந்த ஒன்பது மாதங்களில் ரூபாய் பத்தாயிரம் கோடி அளவிற்கு ஆன்லைன் வர்த்தகம் நடந்திருக்கிறதாம். அது என்ன ஆன்லைன் வர்த்தகம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டெர்நெட் வாயிலாக பொருள்களை விற்பது, வாங்குவது.

 எப்படி பங்கு வர்த்தகம் (stock and shares) ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலமாக நடைபெறுகிறதோ அதைப்போல் பொருள் வர்த்தகம் (commodity) கம்மாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மூலமாக நடைபெறுகிறது.
இரண்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தங்கம் முதல் தானியம் வரை பல பொருள்களும் இவ்வாறு வர்த்தகம் செய்யப்படுகிறது. பொருள்களை நாம் ஆன்லைன்-ல் வாங்கும்போது எந்த பொருளையும் நமக்கு தர மாட்டார்கள். "வரூம்.. ஆனா வராது.." மாதிரி. நம்மிடம் பொருள் இருப்பதற்கான அத்தாட்சியாக நமது கணக்கில் மட்டும் வரவு வைத்துக்கொள்வார்கள். பிறகு நாம் விற்பதற்கு ஆர்டர் கொடுக்கும்போது நமது கணக்கை பற்று வைத்துவிடுவார்கள். அதாவது நாம் வாங்கும்போது கூட்டியும், விற்கும்போது குறைத்தும் கொள்வார்கள். கிட்டத்தட்ட நமது வங்கிக் கணக்கில் செய்வதைப்போல. எனவே அடுத்தமாதம் தேவைக்கான அரிசியை ஆன்லைன்-ல் வாங்கி சமைத்து சாப்பிட முடியாது. பிறகு எதற்கு இவ்வளவு தொகைக்கு மக்கள் வர்த்தகம் செய்திருக்கிறார்கள்? ஊக வணிகம்தான். வெளிப்பூச்சு அற்ற பாஷையில் சொல்வதானால் அரசாங்கம் நடத்தும் சூதாட்டம். நீங்களும் நானும் சீட்டு விளையாண்டால் பிடித்து உள்ளே தள்ளிவிடுவார்கள்.

நாம் வாங்கவும் போவதில்லை விற்கவும் போவதில்லை. நாம் ஒதுங்கிப்போனாலும் நாமும் இதில் பாதிக்கப்படுகிறோம். இன்றைக்குப் பாருங்கள் விலைவாசி எட்டாத உயரத்தில் இருக்கிறது. நம் அறிவுக்கு எட்டிய வகையில் உற்பத்தி குறைந்த மாதிரியில்லை. பிறகு ஏன் விலைவாசி கூடுகிறது. தக்காளியோ வெங்காயமோ சந்தைக்கு அதிகமாய் வந்தால் விலை அதல பாதாளத்திற்கு போகும். வரத்து கம்மியாய் இருந்தால் விலை உச்சத்திற்கு போகும். அதே போல் பணம் (currency) அதிகம் புழங்கினால் பணத்திற்கான மதிப்பு குறைந்து போகிறது. அதே சமயம் புழக்கம் குறைந்தால் மதிப்பு கூடுகிறது. மெய்யான வணிக மாற்று எதுவும் நடக்காமல் பத்தாயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்து போனால் என்ன ஆகும்? பணத்தின் மதிப்பு மிக குறைந்து போகிறது. எனவே அதிக பணம் கொடுத்தால்தான் நம்மால் பொருள்களை வாங்க முடிகிறது. வங்கி பண பட்டுவாடா முறைகளை எளிமைப்படுத்தியது, தனிநபர் வங்கி கடன்களை தாராளமாக்கியது, பங்கு வர்த்தகம் போன்ற ஊக வணிகங்களை பரவலாக்கியது, அயல் நாட்டு நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு பெருகியது போன்ற இன்னபிற காரணங்களும் பணப்புழக்கத்தை அதிகமாக்கின. அவையும் பணத்தின் மதிப்பை குறைக்கின்ற காரணிகள்.


நமது பிரதமர் பொருளாதார மேதை. நல்லது செய்வார். காத்திருப்போம்... அவர் கருணாநிதி, சோனியா போன்ற அல்லை தொல்லைகளை முடித்து முதலில் வெளிவரட்டும்... காத்திருப்போம்...

1 comments:

Anonymous said...

post more about Share market Tips and tactics..how stock exchange differs from online trading expectin from u sir !!!

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in