Sunday, November 21, 2010

வலையில் வசப்பட்ட மீன்கள்



இணையம் என்பது இன்று தவிர்க்கவியலாத விசயமாக் மாறிக்கொண்டு வருகிறது. இந்த மாயவலை நம்மைச் சுற்றி நாம் அறியாவண்ணம் நெய்தெடுக்கப்படுகிறது. இணையத்தைப் பற்றிய ஒரு நையாண்டி கவிதை. 
 


ஆறாம் திணை
இடம் - பூஜ்ஜியமும் பூஜ்ஜியம் சார்ந்த இடங்களும்
மலர் - வலைப்பூ
கடவுள் - கூகுள்
தொழில் -ஜாவாவோடாட்நெட்டோ நிரல் நிறைத்து பக்கம் செய்தல்

 ஐந்தினைகளின் பூவைத் தெரியும்
ஆறாம் திணையின் பூவைத் தெரியுமா....
வலைப்பூ
கிறுக்குங்கள் தாராளாமாய்
கிறுக்கர் என்று இகழ மாட்டார்கள்..
பிளாக்கர் என்பார்கள் பெருமையாய்
ஒருவேளை
விவரமாய் கிறுக்கினால் வருமானமும் வரலாம்

சாவடியோ சந்தையோ
வம்புபேச ஒரு மந்தையோ
வாருங்கள்.. வாருங்கள்..
உட்கார்ந்து பேசலாம் ஆர்குட் தளங்களில்
கொள்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை
கூடிப்பேசலாம்.. கூட்டம் சேர்க்கலாம்...
காரியம் கூட வேண்டுமானால்
ஸ்கைப்பினில் கூடலாம்

புறா விடும் தூது போயே போச்சு
மெயில் விடும் தூது வந்தாச்சு
ஜீமெயிலில் அனுப்பினால் ஷேமம்
நாலு வார்த்தை சேர்த்து அனுப்புவார்கள்
நமது மனது அறிந்து ...  இலவசமாய்..

ஏலத்தின் ஏகபோகம் இ-பே 
எதற்கும் எச்சரிக்கை
சரியாய்ச் சொல்லுங்கள் பொருளின் பெயரை
சமய சந்தர்ப்பங்களில் விண்ணப்பம் வரலாம்
உங்களையே ஏலம் கேட்டு...
கடவுச்சொல் பத்திரம் - கிரடிட்
கார்டுகளும் பத்திரம்
களவாடிகள் காத்திருக்கிறார்கள்
ஹேக்கர்களோ இல்லை போக்கிரிகளோ
களவாடிகள் காத்திருக்கிறார்கள்
விஜயைப் போல்
நல்ல போக்கிரிகளும் இருப்பதாய் சொல்லுகிறார்கள்

யாரைக் கேட்பது என்று சந்தேகமா..
யாகூவை கேளுங்கள்...
கேட்டது கிடைக்கும் தாராளமாய்
மெத்தப் பொறுமையிருந்தால்
மொத்தத்தையும் படித்துக்கொள்ளலாம்
கூகுளைக் கேட்டால்
கொடை வள்ளல்கள் கொட்டிக் கொடுப்பார்கள்...
கூடவே ஓரத்தில் பெட்டிக் கடை விரிப்பார்கள்

வில்லை ஒடித்து வீரம் காட்டவும் வேண்டாம்
கல்லை தூக்கி பலம் காட்டவும் வேண்டாம்
தளங்களில் பதிந்து வையுங்கள்
வரன்கள் வருவார்கள்.. வாழ்க்கை தருவார்கள்..
எனவே சொல்லுங்கள்
திருமணங்கள்
சொர்க்கத்தில் அல்ல
இணையதளங்களில் நிச்சயிக்கப்படிக்கிறது என்று....

வேலைவாய்ப்பு அலுவலரும்
விரும்பிப் பதிந்து வைக்கும் தளம்
நாக்ரீயோ அல்லது மோன்ஸடரோ  
பதிவு மூப்பு... இட ஒதுக்கீடு
இப்படி தொல்லை ஏதுமில்லை
இருப்பினும் இருக்கிறது வேலை..

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in