Tuesday, December 21, 2010

எதுக்கு சொல்லணும் ஜெயமோகனுக்கு நன்றி

முன் கதைச் சுருக்கம்:
ஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும்   என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். நம்மைக் காட்டிலும் வலிமையான நாடுகள் நம் மீது எந்த
ஆக்கிரமிப்பையும் வெளிப்படையாக நடத்தாததால் நாம் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் கருதிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது ஒரு மாயத் தோற்றமே. ஒரு இனம் இன்னொரு இனத்தை சுரண்டுவதற்கான முயற்சி என்பது மனிதகுலத்தின் இயல்பு என்பதே சரித்திரம் நமக்கு சொல்லித்தந்த உண்மை. அத்தகைய சுரண்டல் நம் மீதும் நம்மையறியாமல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணரவில்லை என்ற எனது ஆதங்கத்தை பதிவு செய்வதே எனது நோக்கம். இதைப் பற்றி ஒரே பதிவில் விவரிப்பது என்பது கடினமான காரியம்.
அந்த கருத்தை எளிமைப்படுத்தி அதோடு சிறிது சுவாரசியம் கூட்டுவதற்காக ஐஸ்வர்யா ராயை துணைக்கு அழைத்திருந்தேன். இந்த பதிவிற்கு ஒரு அன்பர் கருத்துரை இட்டிருந்தார். அது என்ன என்பதை பிறகு கூறுகிறேன்.        

முன்முன் கதை(சு)பெருக்கம்:
ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது என்பதே கொள்ளையடித்தல் என்பதுதான். நம்து நாட்டு பொக்கிஷங்களே கொள்ளையடிக்கப்பட்டு  இன்றைக்கும் அயல் நாடுகளிடம் இருப்பதை நாம் அறிவோம். ஆக படையெடுப்பதன் நோக்கமே கொள்ளையடித்தல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய உலக அரசியல் சூழலில்  குட்டி நாடு குவைத்தைக் கூட எந்த நாடும் ஈராக் போல ஆக்கிரமிப்பு செய்து விட முடியாது. இதுதான் இன்றைய யதார்த்தம். இதனால் தான் இலங்கை கூட இந்தியாவிடம் உதார் விடுகிறது. அப்படியானால் வளர்ந்த பலம் மிக்க நாடுகள் எளிய பலமற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வது முடிவு கட்டப்பட்டுவிட்டதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது.   இந்த படையெடுப்பு என்ற மனித குழுக்களின் இயல்பு, வேறு வடிவம் பெற்று, இன்றைக்கும் தொடர்கிறது என்பதே உண்மை. இன்றைக்கு ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த பொருளாதார உதவிகள், தொழில்நுட்ப உதவிகள், கலாசார பரிமாற்றங்கள் போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன. IMF, UNO போன்ற சர்வதேச அமைப்புகளும் கூட ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

நாம் பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் பெற்று, அந்த பணத்தைக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆயுதங்கள் வாங்கி நம்மை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். ஆயுத விற்பனை மூலம் கிடைக்கின்ற ஆதாயம் ஒரு புறம், பன்னாட்டு நிதியங்களின் மூலம் இந்திய சமூகத்தின் மீது விதிக்கப்படுகின்ற நிர்பந்தங்கள் ஒரு புறம். இவ்வாறான சூழ்ச்சி சூழலில் நாம் சிக்க வைக்கப்பட்டோம்.  இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கினால், பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கியது. இந்த ஆயுதப் போட்டி வீரியம் குறையாமல் எப்பொழுதும் இருப்பதற்கான பதட்ட சூழல் செய்ற்கையாக உருவாக்கப்பட்டு, நீடித்து இருக்கும்படி வைக்கப்பட்டது. நமது தொழில் நுட்பம் சிறிது வளர்ச்சி பெற்று ஆயுதத் தயாரிப்பில் தன்னிறைவு பெற்றபின், அதாவது நாம் அவர்களை சார்ந்திருப்பதற்கான அவசியம் தளர்வாடைந்த போது, நம் மீது மறைமுகமாக ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் சித்தாந்தங்கள் சிறிது மாற்றியமைக்கப்பட்டன. உலகமயமாக்கல், தொழில்நுட்ப மேலாதிக்கம், காப்புரிமையில் செய்யப்பட்ட தகிடு தத்தங்கள், புரியாத புதுப்புது நோய்கள், அதற்கான மருந்துகள் போன்ற உத்திகளின் மூலமாக நாம் தொடர்ந்து சுரண்டப்படுகிறோம்.

பி.டி கத்தரிக்காய் போன்ற புதுவிதமான பயிர் விதைகளை நம்து மண்ணில் விதைப்பதன் மூலம் நம்து மண்ணின் வளமும் இயற்கை தன்மையும் மாசு படுத்தப்பட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மேலும் இந்த முறையில் விளைவிக்கப்படும் காய்களில் மீண்டும் விதைகள் கிடைக்காது என்பதால் அந்த விதைகளுக்காக நாம் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்கவேண்டும். இதைத்தான் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் எதிர்த்து போராடுகிறார்கள்.  நமது கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக அயல்நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க செய்யும் அரசின் முயற்சிகளை எதிர்க்கும் போராட்டமே மாவோ தீவிரவாதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.   அனாவசியமான தடுப்பூசிகளை நம் மீது புகுத்தி அவை நமக்கு அவசியமானவை என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தனது பேட்டியில் இதை தெளிவுபடுத்தி தனது குழந்தைக்கே கூட தான் இந்த மருந்துகளை அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்ற புதுவிதமான நோய்கள் பரப்பிவிடப்பட்டு அதற்கான மருந்துகளின் விற்பனை முடுக்கி விடப்படுகிறது. இதைப்போல் பற்பல உத்திகளும் கையாளப்படுகின்றன. நாம் இதுவரை இழந்தது போதும். நாம் ஏனைய சமூகங்களுக்கு ஒரு முன் மாதிரி சமூகமாக உருவெடுக்க வேண்டும். நாம் "பின்பற்றுபவர்கள்" என்ற நிலையிலிருந்து மாறி, நமது கலாசாரத்தை சிறந்த வாழ்வியல் முறை என்று உலகிற்கு உணர்த்தக் கூடிய "முன்னோடிகள்" என்ற நிலைக்கு மாறாத வரையிலும் நாம் ஏமாற்றப்படுவது தொடர்ந்து நடைபெறவே செய்யும். யோகா போன்ற நமது வாழ்வியல் முறைகள், நமது உணவு முறைகள், இயற்கை மருத்துவ முறைகள், காந்திய சிந்தனைகள் போன்ற அற்புதமான கருத்தாக்கங்கள் உலக சமுதாயத்தால் இன்று மரியாதையாக கவனிக்கப்படுகின்றன. ஆனால் அந்த அருமைகளையும் அவையும் திருடப்படுவதற்கான சாத்தியங்களையும் நாம் தான் அறியாதவர்களாய் இருக்கிறோம்.  இதைப் பற்றிய விழிப்புணர்வும், விவாதங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதைப் பற்றி தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற எனது அவாவின் ஒரு சிறிய துவக்கமாகவே மேலே கண்ட "ஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும்" - என்ற அந்த பதிவை எழுதியிருந்தேன்.   

நண்பரின் ஆதங்கம்:
இப்பொழுது நண்பரின் கருத்துரைக்கு வருவோம்...  அந்த நண்பர் தனது கருத்துரையில் "ஜெயமோகனுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்." - என்று ஆதங்கப்பட்டிருந்தார். இதைப் படித்ததும் எனக்கு ஏதும் விளங்கவில்லை.  ஜெயமோகன் யார்? அவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்? எழுதியிருந்த அந்த நண்பரின் பெயர் ஜெயமோகன் என இருக்குமோ.. அதை சம்பந்தப்படுத்தி ஏதும் பகடி செய்திருக்கிறாரோ என குழம்பினேன். நண்பர் தொடுப்பாய்  கொடுத்திருந்த வலைப்பக்கத்திற்கு (நல்லவேளையாக அந்த உதவியை செய்திருந்தார்) சென்று பார்த்தேன். அது எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் ஒரு பக்கம். அப்பொழுதுதான் எனக்கு திரு.ஜெயமோகன் தனக்கென ஒரு வலைத்தளம் வைத்திருப்பதே தெரியவந்தது. பத்திரிக்கைகளின் வாயிலாக ஜெயமோகன் என்ற இலக்கிய அந்தஸ்து உள்ள எழுத்தாளர் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் ஜெயமோகன் உட்பட சிறந்த இலக்கியவாதிகளாய் பேசப்படுகிற எழுத்தாளர்களின் எழுத்துகளின் மீது எனக்கு பரிச்சயம் கிடையாது. அத்தகைய வாசிப்பனுபவம் எனக்கு வாய்க்கவுமில்லை, நான் பெரிதாய் முயற்சிக்கவுமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளை மட்டுமே வாசித்து வருகிறேன். செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், அவை என் மீது தாக்கம் ஏற்படுத்தி, என்னை சிந்திக்க தூண்டுவதற்கும் இந்த மாதிரியான பத்திரிக்கைகளே போதும். ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது ஏற்படாத பிரமிப்பு, மற்றவர்கள் அவரை அதீதமாக பாராட்டும் போது ஏற்பட்டது. இந்த பிரமிப்பும் இந்த மாதிரியான சாதாரண பத்திரிக்கைகளின் மூலமே. சமீபத்தில் இயக்குனர் சங்கர் சம்பந்தப்பட்ட விழாவில் இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் பார்த்திபன் ஆகியோர் பேசியதையும் இந்த வெகுஜன பத்திரிக்கைகளின் (குங்குமம், விகடன் அல்லது தினமலர் - எனக்கு நினைவில் இல்லை, இந்த மூன்றில் ஒன்று) வாயிலாகவே அறிந்து கொண்டேன். FMCG பொருட்களின் மார்க்கெட்டில் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை தினமலர் பத்திரிக்கை ஒரு கட்டுரையில்  சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மேலே முன்முன் கதையில் நான் குறிப்பிட்டிருந்த எனது அவா, எளிமையாய் இதை சொல்ல வேண்டும் என்ற சிறிய உத்தியாய் முளைவிட்டு  சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த சமயத்தில், இந்த பத்திரிக்கை செய்திகள் என்னை உடனடியாக எழுதும்படி தூண்டின. எழுதினேன். அவ்வளவே. இதே போன்ற கருத்தை ஜெயமோகனும் தனது பக்கத்தில் கொடுத்திருப்பதால் நான் அதை பின்பற்றி எழுதியிருப்பதாய் நண்பர் நினைத்துக்கொண்டார் போலும்.

கன்னத்தில் பளார் என்று அறைந்தால் ஆ என்று கத்துவது இயல்பு. இதற்கு யாரும் கற்றுத் தர வேண்டியதில்லை. என் கன்னத்தில் (எனது நாடு, எனது மக்கள்) அறையப்படுவதை நான் உணர்வதில் ஏதும் பிரச்னை இல்லாதவரையிலும், கத்துவதில் என்ன பிரச்னை இருந்துவிடப் போகிறது. இதை சொல்லித்தர எனக்கு ஜெயமோகன் தேவையாயிருக்கவில்லை.  நல்ல அவதானிப்பும், கவனமும், சிறிது அக்கறையும் இருந்து விட்டால் இதென்ன, நம்மை சுற்றி நடக்கும் எல்லா அநியாயங்களையுமே நம்மால் உணரமுடியும். இதை சாத்தியப்படுத்த நண்பராலே கூட இயலும். மேலும் இந்த விஷயம் ஒரு செய்தி; கதை, நாவல், கவிதை போன்ற ஆக்கம் அல்ல,  களவாடிச்செல்ல. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எண்ணற்றோர் (எழுத்தாளர்கள் மட்டுமல்ல) எழுதித் தீர்த்திருப்பார்கள், பேசித் தீர்த்திருப்பார்கள். தினமலர் தளத்திலேயே எவ்வளவு கருத்துரைகள். தங்களை எழுத்தாளர்களாய் வரித்துக் கொள்ள வேண்டும் என்பத்ற்காக எழுதபட்டதல்ல இவை. இவை எழுதியவர்களின் வேதனை, ஆற்றாமை, ஆதங்கம் ஆகியவற்றின் வெளிப்பாடு. எழுதாதவர்கள் வாய்மொழியாக மற்றவர்களிடம் சொல்லி புலம்பியிருக்கலாம். அல்லது மனதிற்குள்ளேயே ஏக்கப் பெருமூச்சுகளோடு புழுங்கியிருக்கலாம். இதில் யார் முன்னே சொன்னது, யார் பின்னே சொன்னது. யார் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தி உரத்து மொழியப்பட்ட சேதி என்றால், இது மென்மையாய் மொழியப்பட்ட சேதி. காது சரியாய் கேட்பதால், எனக்கு ஒருவித்தில் உரைத்திருக்கிறது, ஜெயமோகனுக்கு இன்னொரு விதத்தில் உரைத்திருக்கிறது. அவ்வளவே.           


ஜெயமோகனின் கருத்தாக்கம் 
ஆதிக்க சமூகம், இந்திய சமூகத்தின் அங்கீகாரத்தை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், உண்மைக்கு பொருந்தாத வகையில் தாங்களே நிர்ணயித்துக்கொண்ட இந்திய படைப்புகளை உயர்த்திப்பிடித்து, செயற்கையான வெளிச்சத்தை அந்த படைப்புகளின் மீது படரச் செய்து,  தந்திரமான முறையில், இந்திய சமூகத்தை ஊடுருவுகிறது. அவர்கள் செய்யும் விளம்பர உத்திகளால் இந்தியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். உண்மையை கண்டு தெளிவதிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆதிக்க சமூகம் அடையாளம் காட்டிய படைப்புகளைக் காட்டிலும் உயர்வான படைப்புகள் நம்மிடம் உண்டு. தகுதியுள்ள படைப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு தகுதியற்றவை முன்னிறுத்தப்படுகின்றன என்பதே ஜெயமோகனின் வேதனை.  ஒரு படைப்பாளி, இலக்கிய அந்தஸ்து உள்ளவர், இலக்கிய காதலர் என்ற வகையில் ஜெயமோகனின் ஆதங்கம் அவரது கட்டுரையில் இந்த ரீதியில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நண்பர் அந்த பக்கத்தை எனக்கு அடையாளம் காட்டியபின், நான் படித்து உணர்ந்து கொண்டது இதைத்தான். அருந்ததி ராய் என்ற பிரமை ஒரு சாதாரண பத்திரிக்கை வாசகன் என்ற முறையில் என்னையும் பாதித்திருந்ததுண்டு. ஜெயமோகனின் பக்கத்தை படித்தபின் இந்த மாதிரி விசயங்களிலும் ஆதிக்க சமூகத்தின் தலையீடு இருப்பதை அறிய முடிந்தது. (பெரிய திட்டத்தோடதான் இருப்பாய்ங்க போல). இசைஞானி இளையராஜா தன்னுடைய ஒரு பேட்டியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி குறிப்பிடும் போது "உலகமே ஒப்புக்கொண்டது.. நான் என்ன சொல்ல" என்று குறிப்பிட்டிருந்தார். இதை நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ!

 எனது கருத்தாக்கம்
இலக்கியம் போன்ற அதிநுட்பமான விஷயங்களில் எனக்கு அறிவு போதாது. ஐஸ்வர்யா ராய் -க்கோ அருந்ததி ராய் -க்கோ அங்கீகாரம் கிடைப்பதைப் பற்றியோ கிடைக்காமல் போவதைப் பற்றியோ எனக்கு எந்த அக்கறையும் இல்லை.  என்னைப் போன்ற பாமரர்கள் இந்த விளையாட்டில் சுரண்டப்படுவதே எனது வேதனை. ஒரு பாமரனாக என்னை சுற்றி நிகழ்கின்ற நிக்ழ்வுகள், எனக்குள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளிலிருந்து நான் ஊகித்தறிந்த உண்மைகள், என்னில் ஏற்படுத்திய அதிர்ச்சியை, சக மனிதரிடம் பகிர்ந்து கொள்ள விழைந்தேன். பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்று பார்த்தால் பல்விதமான ஷாம்பூ, ஃபேர் & லவ்லி போன்ற சிவப்பழகு கிரீம்கள், கண்டிஷனர்கள் போன்ற சாஷெக்கள் சரம் சரமாய் தொங்குகின்றன. சிறிது காலத்திற்கு முன் இதையெல்லாம் நாம் பார்த்திருக்கமாட்டோம். இந்த மாற்றம் எப்படி வந்தது? ஒரு நாள் எனது நண்பரின் மகன் என் முன்னே வந்து நின்றான். தலையில் பெருச்சாளி புகுந்து விளையாடியதைப் போல் திட்டு திட்டாக முடியைக் காணவில்லை. என்ன என்று விசாரித்தால், "இந்த ஹேர் ஸ்டைலுக்கு பெயர் அட்டாக்" என்றான். உண்மையிலேயே அவனது தலையில் பெரிய அட்டாக்கே நடந்திருந்தது. பெண்கள் சடை பின்னிப் போடுவதால், அவர்களின் தலைமுடி நெளி நெளியாக அழகாக இருக்கும். இப்பொழுது பார்த்தால் ஸ்டெரெயிட்டனிங் என்று எதையோ முயற்சித்து அயர்ன் செய்ததைப் போல் நீள நீளமாக இருக்கிறது. அதிலும் சிலர் நுனி முடியை ஒரே சீராக வைத்துக் கொள்ளாமல் குதறி வைத்ததைப் போல் கத்தரித்து கொள்கிறார்கள். அழகில்லாத ஒரு விஷயத்தை அழகானது என்று எப்படி நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்?  கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மேகி சேமியா வேண்டுமென்று கேட்டார். நான் நமக்கு சரியாக காதில் விழவில்லையோ.. ராகி சேமியா கேட்டிருப்பாரோ என்று நினைத்தேன். காது உணர்ந்தது தான் சரி, புத்தி உணர்ந்தது தான் தவறு. கடைக்காரர் சொன்னார் குழந்தைகளின் காலை மாலை உணவு இதுதான். "maggie" நன்றாக விற்கிறது என்று. தகுதியற்ற உணவுகள் எப்படி நமது உணவு பழக்கத்தில் இடம்பிடித்தன? இந்த கேள்விகளுக்கு விடை காண முற்பட்டால், ஏதும் பிரயத்தனப்படாமலே (ஜெயமோகன் பக்கத்தை படிக்காமலேயே) நான் எழுதிய பதிவைப் போல் எத்தனையோ பதிவுகளை எழுதிவிடலாம். எனது பதிவு பயணிப்பது வேறு திசையில், ஜெயமோகனின் பதிவு பயணிப்பது வேறு திசையில்.  நண்பர் எழுதியது மாதிரியான கருத்துரைகள் சொல்ல வந்த விசயத்தினை நீர்த்துப் போக செய்துவிடுகின்றன.  நண்பருக்கு என்னால் ஒரு உறுதி சொல்ல முடியும். ஜெய்மோகன் மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய கர்த்தாவின் எந்த படைப்பையும் நான் உருவிடமாட்டேன்.  என்னிடம் சொன்ன மாதிரி எனக்கு ஒரு நன்றி சொல்லுமாறு, ஜெயமோகனிடம் நண்பர் கேட்டிருப்பாரா.. பிறகு இது என்ன நியாயம்? ஜெயமோகனின் இலக்கிய ஆளுமையில் நண்பர் தன்னைத்தானே ஆட்படுத்தியிருக்கிறார். அது அவரது விருப்பம். அதற்குள் என்னையும் ஆட்படுத்த நினைப்பது முறையற்ற அத்துமீறல் இல்லையா?

என் கதை:
முன் கதை, முன்முன் கதையெல்லாம் பார்த்துவிட்டோம். கடைசியில் என் கதையையும் பார்துவிடுவோமே.. ஸ்வீட், காரம் சாப்பிட்டாகிவிட்டது.. காபியை குடித்து கச்சேரியை முடிப்போம். சிறிது காலத்திற்கு முன் வேலை நிமித்தமாக நான் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தூரம் தினமும் சென்றுவர நேர்ந்தது.  சீவி முடித்து சிங்காரித்து செவத்த பொட்டு நெற்றியில் வைத்து சென்றாலும், பஸ்ஸைவிட்டு இறங்கும் போது என்னைப் பார்க்க எனக்கே பயமாயிருக்கும். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி, முடி சும்மா 360 டிகிரியிலும் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். பனங்கொட்டையில் செய்த கண் திருஷ்டி பொம்மை மாதிரி. பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து உத்தேசமாக சீவினாலும், உத்தேசத்திற்கெல்லாம் உத்தரவாதம் இருக்காது. தேங்காய் எண்ணையிலிருந்து ஆரம்பித்து விளக்கெண்ணைவரை முயற்சித்து பார்த்தும் ஏதும் சரியாய் வர (வார) வில்லை.   சரி இந்த தலை-யாய பிரசினைக்கு எப்படியும் ஒரு முடி-வு கட்டவேண்டுமே என்று கலங்கியிருந்தேன். அப்பொழுதுதான் இந்த ஸ்டைலிங் ஜெல் எல்லாம் வர ஆரம்பித்திருந்த சமயம். அதைப்பற்றி எனக்கு தெரியவர ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த ஸ்டைலிங் ஜெல்லை பாவிக்க ஆரம்பித்தேன். அற்புதமாய் பலன் தெரிந்தது. அது பசை போல (போல என்ன போல, பசையே தான்) சிக்கென்று பிடித்துக் கொண்டு என் முடி அனைத்தையும் அடக்கியாண்டது. முடியெல்லாம் கம்பியைப் போன்றும், ஜெல்லுக்கு கட்டுப்பட்ட வீரனைப் போலவும் விறைப்பாக நின்றன. கொஞ்ச காலம் சந்தோசமாதான் போனது. பிறகு எனது முடிகள் சொல்லிக்கொள்ளாமலே என்னிடமிருந்து விடுதலை பெற துவங்கின. பாப்புலேசன் படபடவென குறைய ஆரம்பித்ததும் பதறிப்போன நான் அவசர ஆலோசனையில் இறங்கியபோது கண்டுகொண்டது - பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் வீக் என்று. முடிகளோடு பலகட்டமாய் நடத்திய எந்த சமரச பேச்சு வார்த்தைகளும் பலனளிக்காமல், முடிகள் ரோசத்துடன் போயேபோய்விட்டன. இப்பொழுதெல்லாம்  எந்த காற்றிலும் எனக்கு பிரச்சினையே இல்லை. ஏனெனில் எனக்கு முடியே இல்லை. எனவே ஜெயமோகனைக் காட்டிலும் அதிகமாய் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் அதிகமாய் பேச எனக்கு உரிமையிருக்கிறது. ஜெயமோகன் முடியரசர் (நிரம்ப முடியுடையவர்) என்று நம்புவோம்.

ஜெயமோகனை அறிமுகப்படுத்திய விதத்தில் நண்பருக்கு நன்றி. ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி. தினமலருக்கு நன்றி. நண்பரின் புண்ணியத்தில் இப்போதிருந்து ஜெயமோகனின் எழுத்துகளை படிக்க போவதால் இப்போதில்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் ஜெயமோகனுக்கும் நன்றி தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.

நான் ஏதாவது ஒரு பதிவை எழுதி முடித்த பின்,  அனைத்து எழுத்தாளர்களின் (பிரபல எழுத்தாளர்கள் மற்றும் என்னைப் போல் சமூக வலைத்தளங்களில் எழுதும் நண்பர்கள்) தளங்களுக்கும் சென்று அவர்கள் இதே போல் ஏதும் எழுதியிருக்கிறார்களா என கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரு நன்றி மடல் எழுதி இணைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் நண்பரின் ஆலோசனையை அமல்படுத்த இயலாத நிலையையும் சொல்லி விடை பெறுகிறேன்.

நான் எழுதிய பக்கத்தின் முகவரியும், நண்பர் குறிப்பிட்ட ஜெயமோகனின் பக்க முகவரியும் கொடுத்துள்ளேன். நேரமிருப்பவர்கள் அவசியம் பார்த்து படித்து சொல்லவும்...       

http://enmanaosai.blogspot.com/2010/12/before-and-after-iswarya-rai.html

http://www.jeyamohan.in/?p=10189

இன்னொரு பதிவில் கொஞ்சம் சுமூகமான மனநிலையில் சந்திப்போம்...

4 comments:

Anonymous said...

என்னைப்போல் ஊழல் , லஞ்சம் மற்றும் அரசு முறைகேடுகளுக்கு எதிராக தனியாகவோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ செயல் பட்டால், என்ன மாதிரி துன்பங்கள் வரும் என்பதை சில கட்டுரைகள் மற்றும் உதாரணங்களுடன் எழுதினால் மிக நன்றாக இருக்கும். நன்றி.

Paji said...

//என்னைப்போல் ஊழல் , லஞ்சம் மற்றும் அரசு முறைகேடுகளுக்கு எதிராக தனியாகவோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ செயல் பட்டால், என்ன மாதிரி துன்பங்கள் வரும் என்பதை சில கட்டுரைகள் மற்றும் உதாரணங்களுடன் எழுதினால் மிக நன்றாக இருக்கும். நன்றி.//

நண்பரே, தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். விழிப்புணர்வு மட்டுமே சமூக அவலங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். இன்றைய சூழலில் இந்த மாதிரியான சமூக வலைத்தளங்கள் இதை சாத்தியப் படுத்தியிருக்கின்றன. நீங்கள் எந்த மாதிரியான தளங்களில் செயல்படுகிறீர்கள் என தெரிவிக்கவில்லை. இங்கே தெரிவிக்க தயக்கமாயிருந்தால் இதே பக்கத்தின் மேற்பகுதியில் 'contact form' என்ற தொடுப்பை பின்பற்றி அந்த பலகையில், உங்களைப் பற்றிய அதிக விளக்கங்களோடு எழுதலாம். அங்கே நீங்கள் தெரிவிக்கின்ற விவரங்கள், இங்கே பிரசுரிக்கப்படாது. தங்களின் ஆர்வத்திற்கும், அக்கறைக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in