Saturday, December 18, 2010

ஐஸ்வர்யா ராய்க்கு முன்னும் பின்னும்

ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் இந்தியாவின் அழகிற்கான குறியீடு. உண்மை என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் இப்படி ஒரு கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு ஆள் இழுத்தால் நகருமா தேர். ஊர் கூடி இழுத்தால் தான் நகரும். அப்படி ஊர் கூடி இழுத்த தேர் ஐஸ்வர்யா.
சூப்பர் ஸ்டாரே கூட இமய மலைக்கெல்லாம் போய் கிடைக்காத சாந்தியை, ஐஸ்வர்யாவுடன் நடித்த பின் தான் அடைந்திருப்பார். அண்ணன் ஒத்துக்கொள்ள கூச்சப்பட்டாலும் அப்படியும் இருக்கலாமோ  என்பது  மாதிரியான தோற்றம் இருப்பது உண்மை. முன்னால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூட தன்னுடைய இந்திய விஜயத்தின் போது ஐஸ்வரயா-வைப் பார்க்க விருப்பப்பட்டாராம்.  சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஐஸ்வர்யாவிற்கு அடுத்த இருக்கை தனக்கு அளிக்கப்பட்டதில் புளகாங்கிதப் பட்டுப்போனார்.  அதே விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனக்கான இருக்கை சற்று தள்ளி இருந்ததற்காக வருத்தப்பட்டாலும்,  ஐஸ்வர்யாராயின் கண்கள் அழகாயிருப்பதாக வர்ணிக்க தவறவில்லை. நடிகர் பார்த்திபன் 50 கே‌ஜி தாஜ்மஹால் எப்பொழுது 5 கே‌ஜி தாஜ்மகாலை குட்டி போடும்  என்று தனது பங்கிற்கு கவலைப் பட்டிருந்தார்.  ஐஸ்வர்யா ராய் அழகியாக அறிவிக்கப்பட்டதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ இந்தியாவில் யாருமே அழகானவர்கள் இல்லையா?  இல்லை எனபது மாதிரிதான் ஒரு தோற்றம் இருக்கிறது. அப்படித்தான் ஊர் சொல்கிறது.

சரி நாம் மேட்டருக்கு வருவோம். தலைப்பைப் பார்த்துவிட்டு என்னவோ ஏதோ என்று நினைத்து ஜொல்லுடன் வந்திருப்பீர்கள். ஐஸ்வர்யா ராய் -க்கு முன்னும் பின்னும் என்றால் அந்த அர்த்தமெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.  ஐஸ்வர்யா ராய் அழகியாய் அறிவிக்கப்பட்டதற்கு முந்தைய காலத்திலும், பிந்தைய காலத்திலும் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளவும். அப்படி எடுத்துக்கொள்வது உங்களுக்கு சற்று சிரமமாய் இருந்தாலும் வேறு வழியில்லை. கிறித்துவிற்கு முன்னும் கிறித்துவிற்கு பின்னும்  அதாவது கி.மு., கி.பி என்பதைப்போல.

சாஃப்ட்வேர் நிறுவனங்களும், அவுட்சோர்ஸிங் நிறுவனங்களும் இந்தியாவில் பட்டறையைப் போட்டால் அதிகமாய் அள்ளலாம் என்று ஜாகையை இந்தியாவிற்கு மாற்றியதன் பிறகு இந்தியர்களின் கையில் காசு அதிகமாய் புழங்க ஆரம்பித்தது. அதை ஆட்டையைப் போட அடுத்து வந்தவர்கள் ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தினர். அவர்கள் காலூன்றி கோலோச்சுவதற்கு பண்ணிய சின்ன விளையாட்டு தான் இந்திய மங்கைகளை அழகிகள் என்று அறிவித்தது. ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், லாரா தத்தா என்று வரிசையாக இந்திய நங்கைகள் அழகிகளாய் அறிவிக்கப்பட்டார்கள். ஏதோ நானும் நீங்களும் அழகானது மாதிரியும்,  அப்படிபட்ட  அழகை விட்டுப்போகாமல் மெயின்டெய்ன்  பண்ணவேண்டும் என்பதாக நாமும் கங்கணம் கட்டிக்கொண்டு அன்றையிலிருந்து பகல் பொழுதுக்கு ஒரு கிரீம்,  இரவுக்கு ஒரு கிரீம், வெயிலிலிருந்து பாதுகாக்க ஒரு கிரீம், பனியிலிருந்து பாதுகாக்க ஒரு கிரீம், தலைக்கு, முகத்திற்கு, உடம்பிற்கு, பாதத்திற்கு என்று உடம்பை பல பகுதிகளாக கூறு போட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான கிரீம் என்று அள்ளி அள்ளி பூச ஆரம்பித்தோம். கண்ட  கண்ட புதுவிதமான தோல் நோய்கள் வந்தது தான் மிச்சம். உதாரணத்திற்கு தலையை மட்டும் எடுத்துக்கொள்வோமே. நார்மல் ஹேர், டிரை ஹேர், ஆய்லி ஹேர் என்றெல்லாம் முடிக்குள் ஜாதிப்பிரிவினையெல்லாம் உருவாக்கி,   தலை கழுவ பலவித ஷாம்புகள், கழுவியதால் கசங்கி சிக்கலான தலை முடியை சீராக்க கண்டிஷனர் லோஷன்கள், கலர் மாற்ற கலரிங் கிரீம்கள், முள்ளம்பன்றி போல முடியை குத்து குத்தா நிற்க வைக்க ஸ்டைலிங் ஜெல்கள், சுருள் சுருளாக வளைத்து விட ஸ்பிரே வடிவிலான பசைகள் இன்னும் பற்பல. இப்படி கண்டதையும் பாவித்து, அதனால் தலையில் ஏற்பட்ட பொடுகைப் போக்க தனி ட்ரீட்மெண்ட் வேறு. ஒய்யார தாழாம்பூக் கொண்டை, உள்ளுக்குள் ஓடுது ஈரும் பேனும் - என்று ஒரு பழமொழி சொல்வார்கள், அதைப்போல.  இவையெல்லாம் தலை அலங்காரத்திற்கு மட்டும். அதிலும் நீங்களாகவே வீட்டில் உபயோகிக்க கூடியவை. பியூட்டி பார்லருக்கு போனால் இன்னும் நிறைய பொருள்கள் தலை அல்ங்காரத்திற்கு மட்டும் இருக்கின்றன.   முகம், கை, கால், கண், நகம், பாதம் என உடம்பைப் பாக ரீதியாகப் பிரித்து, ஆயில் ஸ்கின், டிரை ஸ்கின், நார்மல் ஸ்கின் என  பக்குவ ரீதியாகப் பிரித்து, ஒப்பனைக் காலத்தை பகல்-இரவு, பனி-வெயில், வீட்டிலிருக்கும் சமயம், வெளியில் சுத்தும் சமயம்  என கால ரீதியாகப் பிரித்து, அலுவலகத்திற்கான ஒப்பனை, விழாக்களுக்கான ஒப்பனை, வீட்டிலிருக்கும் சமயத்திற்கான ஒப்பனை என்று தர வரிசைப்படுத்தி, சுத்தப்படுத்தல் (cleansing), தயார்படுத்தல் (foundation), மேம்படுத்தல் (make-up), சீரமைத்தல் (trimming, waxing, coloring, styling, manicuring etc.)  என்று பற்பல நகாசு வேலைகளாய் பிரித்து (சரி, சரி, போதும் இன்னும் நிறைய இருந்தாலும் நீங்கள் கோபப்படுவதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்) பார்த்தால் எவ்வளவு ஒப்பனைப் பொருள்களை நாம் பாவிக்கிறோம் எனபது விளங்கும். இந்த ஒப்பனைப் பொருள்களை தயாரித்து விற்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களே. ஐஸ்வராய், சுஷ்மிதா சென் போன்ற நங்கைகளைப் பிடித்து அழகிகள் என்று அறிவிக்கும்படி அதற்கான அமைப்புகள் மூலமாக தந்திரம் தகிடு தத்தமெல்லாம் செய்து கல்லா கட்டிக்கொண்டிருந்தால், இவற்றுக்கு போலிகளை தயாரித்து சந்தையில் விட்டு சீனாக்காரன் சைடுல சிந்து பாடுகிறான். அந்த போலி தயாரிப்புகளையும் நாம் விட்டு வைக்காமல்  அழகாகவேண்டும் என்ற அதிதீவிர ஆசையோடு அள்ளி அள்ளிப்  பூசிக்கொள்கிறோம். அயல் நாட்டுக்காரன் காசை அள்ளி அள்ளிப் போகிறான். உங்களை சுற்றி ஒரு நோட்டம் விடுங்கள். இந்தியா எவ்வளவு அழகாய் காட்சியளிக்கிறது என்பதை. பையன்கள் எல்லாம் முள்ளம்பன்றித் தலையோடு. பொண்ணுகள் எல்லாம் புகை பிடித்து நிறம் மாறினால் வருமே ஒரு நிறம், அந்த நிறக் கூந்தலோடு. எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்தியா!.

ஒரு சம்பவத்தை சொல்லி பதிவை முடிக்கிறேன். ஐஸ்வர்யா காலம் ஆரம்பித்த சமயத்தில், சிகை திருத்துவதற்காக ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு சென்றிருந்தேன். சிகை திருத்துபவர் எனக்கு சிகை திருத்திக் கொண்டிருந்தார். நான் அந்த நிலையத்தை நோட்டம் விட்டேன். பார்ப்பதற்கு அது பகட்டாகவும், கவர்ச்சியாகவும் இருக்குமே. அப்பொழுது ஒரு குடுவையில் நீல நிறத்தில் கண்ணாடியைக் கரைத்து குழப்பி வைத்ததைப் போல் கவர்ச்சியாக ஒரு வஸ்து இருந்தது. அதன் மேல் ParkAvenue என்ற பிராண்ட் பெயர் இருந்தது. அது தலை முடிக்கு தடவுகிற ஸ்டைலிங் ஜெல். சிகை திருத்துபவரிடம்  "அது என்ன ?" என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் தான் சுவாரசியமானது.  "அதுவா சார், அது முகம் பளபளப்பாய் மாற பூசுகிற கிரீம் சார்... உங்களுக்கு பூசவா?" என்று எனக்கு விளக்கமளிக்கிறோம் என்ற பெருமையோடும், சின்ன பிசினஸ் பிட்டோடும்  சொன்னார். நான் பதறியடித்து "ஐயோ, அது முகத்திற்கு தடவுவது இல்லீங்க, தலை முடிக்கு தடவுவது, யாருக்கும் தடவிப்பிடாதீங்க, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிவிடப்  போகிறது என்றேன். ஆனால் அந்த குடுவையில் அப்பொழுதே பாதி தீர்திருந்தது. எத்தனை பேருக்கு பூசி விட்டிருந்தாரோ. எத்தனை பேர் ஐஸ்வர்யா ராயைப் போல் அழகாக வேண்டும் என்ற ஆசையில் பூசிச் சென்றிருந்தார்களோ. எனக்கு என்ன பதட்டம் என்றால் "அட இப்ப தான் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்கிற மாதிரி அழகுப் புரட்சி வந்திருக்கிறது. இந்த மாதிரி ஆள்கள் அழகுப் புரட்சிக்கு ஆப்பு வைச்சிருவாய்ங்களோ"  என்பதால் தான் பதறிப் போனேன். இந்த மாதிரி ஆட்களால்தான் நாம் அழகாவதே தடுக்கப் படுகிறது. நமது உடம்பை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து, உப்பு தடவி ஊறுகாய் போட்டு, நம்மை எல்லோரையும் அழகாக்க வேண்டும் என்பதற்காக அயல் நாட்டு நிறுவனங்கள் அல்லும்  பகலும்  அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும், நாமும்  சோர்வடையாமல் நம் பங்கிற்கு அள்ளி அள்ளி பூசிக் கொண்டிருக்கும் வரையிலும், இன்றைக்கு  இல்லாவிட்டாலும் என்றைக்காவது நாம் அழகாயிருவோம் பாஸ். முடியை இழந்தாலும் சரி, முகப் பொலிவை இழந்தாலும் சரி நம்பிக்கையை மட்டும் நாம் இழந்து விடக் கூடாது.

சரி இந்த பதிவை எழுதவேண்டும் என்று எப்படி எனக்கு தோன்றியது. உங்கள் அனுமதியோடு அதையும் சொல்லிவிடுகிறேனே. ஷாம்பு ஸாசேக்களில் விலையை அதிகரிக்காமல், சத்தமில்லாமல் அளவை குறைத்து விற்கிறார்களாம். 10ml 8ml என்று மாறி, இன்று 7ml ஆகி விட்டதாம். இந்த விஷயத்தை,  அழகை ஆராதிக்கும் நம் மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே எழுதினேன்.  அளவு குறைந்தால் என்ன நம் சிந்தையெல்லாம் அழகைப்பற்றியே இருக்கும் போது, இதெல்லாம் நமக்கு எங்கே தெரியப்போகிறது. தெரிந்தாலும் நாம் அழகாவதில் இருந்து பின்வாங்க முடியுமா?

பின் குறிப்பு : ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சுத்தமான பசும் பாலையே தன் முகத்திற்கு பயன் படுத்துவதாய் சொல்லியிருக்கிறார். ஐயையோ! என்ன அம்மணி கடைசியில இப்படி கவுத்திபுட்டீங்க..

நீங்க என்ன நினைக்கிறீங்க, அழகுப்புரட்சியை தொடர்ந்து கடைப்பிடிப்பாமோ, விட்டுவிடுவோமா.. கருத்துரையில் எழுதுங்களேன் ...        
                   

8 comments:

Anonymous said...

முன்னால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூட தன்னுடைய இந்திய விஜயத்தின் போது ஐஸ்வரயா-வைப் பார்க்க விருப்பப்பட்டாராம்.

உண்மை தன்மை அற்றது.

Paji said...

// Anonymous - முன்னால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூட தன்னுடைய இந்திய விஜயத்தின் போது ஐஸ்வரயா-வைப் பார்க்க விருப்பப்பட்டாராம்.

உண்மை தன்மை அற்றது. //

பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Anonymous said...

www.jeyamohan.in/?p=10189

ஜெயமோகனுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.

Paji said...

//ஜெயமோகனுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.//

நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி. பின் வரும் தொடுப்பை பார்க்கவும். நன்றி.

http://enmanaosai.blogspot.com/2010/12/ethukku-sollanum-jeyamohanukku-nanry.html

Paji said...

philosophy prabhakaran
//உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...//

தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி பிரபாகர். உங்கள் பிலோசபி-யை நானும் பார்த்தேன்.

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com

Paji said...

//நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com //

தங்களின் வருகைக்கு நன்றி. ஒரு சின்ன சந்தேகம். எனக்கு எதற்கு நன்றி சொல்லியிருக்கிறீர்கள்? ஆசிரியர் என்றால் எந்த சப்ஜெக்ட் எடுக்கிறீர்கள்?

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in